ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின், முன்னைய உறுப்பினர்களது பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் புதிய உறுப்பினர்களை நியமித்தார்.
இந்த ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் கீழ் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைவர் நீதியரசர் ரோஹினி வல்கம, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் மூத்த விரிவுரையாளர்- அத்துலசிறி சமரகோன், முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, மற்றும் சட்டத்தரணி லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
எனினும் , தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர், தகுதியற்றவர் என்றும், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய தனி ஆட்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது ஆணைக்குழுவின் அமைப்பிற்கு அவசியமானது என்றும் குடியியல் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிறைவேற்றம், இலங்கையின் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இந்தநிலையில் 20வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற பேரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த ஆணைக்குழுவில், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய தனி ஆட்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக குடியியல் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எனவே தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் நற்பெயரை நிலைநிறுத்துவதற்கும் அதன் பணியைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற ஒரு நேர்மையான ஒருவரை, ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கவேண்டும் என்று குடியியல் சமூக அமைப்புகள் கோரியுள்ளன.
இந்தநிலையில் குறித்த கோரிக்கையில், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்- நடிஷானி பெரேரா, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் செயல் இயக்குநர்- ரோஹன ஹெட்டியாராச்சி, செயல் இயக்குநர், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இயக்குநர் -பாக்கியசோதி சரவணமுத்து, சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்- டாக்டர் சகுந்தலா கதிர்காமர், மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் -லயனல் குருகே, , தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்-மஞ்சுள கஜநாயக்க, ரைட் டு லைஃப் மனித உரிமைகள் மையத்தின் செயல் இயக்குநர்- பிலிப் திசாநாயக்க, விழுது அமைப்பின் நிர்வாக இயக்குனர்- மைத்ரேயி ராஜசிங்கம், இலங்கையின் உணவு முதல் தகவல் மற்றும் செயல் வலையமைப்பின் தலைவர்-திலக் காரியவசம், தேசிய தேசோதயா பேரவையின் தேசிய அமைப்பாளர் – நிஷாந்த ப்ரீத்திராஜ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவுக்கும் முன்னதாக தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்படாது, பலரின் கோரிக்கைகளுக்கு பின்னர் தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.