இன்றும் ஆழிப்பேரலை நினைவுகளுடன் வாழும் வடமராட்சிகிழக்கு மக்கள்………..!

(விசேட நிருபர் பாணு)

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 17ஆண்டுகள் கடந்து சென்றிருந்தாலும் இறந்தவர்களின் நினைவுகளோடும் வலிகளோடும் கூடிய உள பாதிப்பிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமலும் தான் இன்னமும் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்டுகள் பல கடந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் ஏதோவொரு வழியில் தொடர்கிறது.


வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கடற்கரைகளுக்கு சென்றால் கட்டிடங்கள் தரைமட்டங்களாகவும், இயற்கையில் செழித்திருந்த மரங்கள் தலை இல்லாமலும், பாலைவனங்கள் போன்றும் காட்சியளிக்கிறது. சுனாமி அனர்த்தம் ஒருபுறம் யுத்த அழிவு மறுபுறம் என இரண்டின் அழிவுகளும் ஏற்படுத்திய பாதிப்புக்கள் ஏராளம். அதுவரை காலமும் யுத்தத்தின் வடுக்களை சந்தித்த மக்களை இறுதியில் இயற்கை கூட விட்டு வைக்கவில்லை. பல குடும்பங்கள் இல்லாமல் போனார்கள். குடும்பத்தில் பல உயிர்கள் இழக்கப்பட்டன. குழந்தைகள் முதல் முதியவர் வரை பலரையும் கொத்துக் கொத்தாக காவு வாங்கியது பேரலைகள்.


மக்களுக்கு வருமானத்தை ஈட்டி பொருளாதாரத்தையே உயர்த்திய கடல் அலை பல உயிர்களை கொன்றொழித்து அங்கவீனர்களாக்கி பொருளாதார இழப்புக்களையும் சந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் கடற்கரையோர கிராமங்களையே இல்லாமல் ஆக்கிய துயர நிகழ்வை தமிழ் மக்களால் மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.

2004 மார்கழி 26 அன்று காலை அந்த சோக சம்பவம் இடம்பெற்றது. இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.
இலங்கையின் கரையோர மாவட்டங்கள் சுனாமி அனர்த்தத்தால் பாதிப்புக்களை சந்தித்தன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கொழும்பு மாவட்டத்தின் கரையோரத்தின் சில பகுதிகள் பாதிப்பை சந்தித்தன.


இவ் அனர்த்தத்தால் எமது நாட்டில் மட்டக்களப்பு -2975, திருகோணமலை-984, யாழ்ப்பாணம்-1256, முல்லைத்தீவு-2902, கிளிநொச்சி-32 என மாவட்டரீதியாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

தமிழர் பகுதிகளில் ஆழிப்பேரலையில் ஏற்பட்ட அழிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாதளவு பேரழிவு. அதுவும் கரையோர மக்களின் பொருளாதாரத்தையும் அடியோடு ஆட்டம் காண செய்தது. ஆகையால் ஆழிப்பேரலை பற்றி அறிவியல் ரீதியான தேடலை மேற்கொள்ள வேண்டும். நீண்டகால யுத்தத்தை சந்தித்த 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் சமாதானம் நிலவிக் கொண்டிருந்த காலப்பகுதியில் தான் சுனாமி என்ற இயற்கை அனர்த்தம் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்று 17 ஆண்டுகள் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு உருண்டோடினாலும் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புக்களை வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு சென்றால் அவதானிக்க முடியும். உறவுகளின் வலியும் தொடர்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோரும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும் உறவுகளை இழந்த சொந்தங்கள் என துயரங்களில் வாழும் அவல நிலை தொடர்கிறது.

சுனாமி அனர்த்தம் தொடர்பான அறிவை இனியுள்ள காலங்களில் பெற வேண்டும். முற்கூட்டிய எச்சரிக்கை பெறுவதனை உறுதிப்படுத்த வேண்டும்.

சுனாமியின் பின்னர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் உருவாக்கினாலும், இப்போது பெரும்பாலும் சுனாமி பற்றிய விடயங்கள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை. ஒவ்வோராண்டும் அஞ்சலிப்பதோடு எல்லாம் முடிந்து விடுகின்றன.

கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகளாக உருவாகி கரையை தாக்கி சேதங்களை ஏற்படுத்துவதே சுனாமி என்கின்றோம். சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியில் இருந்து வந்தது. இதனை தமிழர்கள் ஆழிப்பேரலை என குறிப்பிடுகின்றனர். சிறிய உயரமுடைய அலைகள் சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையின் அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும் கரையில் இருந்து அதன் உயரத்திற்கு ஏற்ப கடல்நீர் தரைப்பகுதியினுள் ஊடுருவும் பின் இப்பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்திற்கு பின்னே தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமியின் அலைகளின் உயரத்திற்கு ஏற்ப அதனால் ஏற்படும் சேதங்களும் காணப்படும்.

சுனாமி அலைகளின் தாக்கத்திற்கு பின் அந்த தரைப்பகுதியில் மாற்றங்கள் காணலாம். கடல் நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்ந்ததனால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதியாக இருந்தவை நிலமாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

கி.மு 426 கிரேக்க வரலாற்றாசரியர் தியுசிடைட்ஸ் சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும், பின்பு திடீர் என பின் வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டார்.

கி.பி 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப்பெரிய அழிவுக்கு பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில் கடல்பகுதியில் மலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியில் உள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளாக உருவாகின்றது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய அதன் தட்பவெப்ப இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு நிலத்தட்டுகள் உருவாகின. இந்த தட்டுக்களின் மீது ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத்தான் “டெக்டானிக் பிளேட்கள்” என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர் கூற்றுப்படி கி.மு 365 ஆம் ஆண்டு யூலை 21 ஆம் திகதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி எகிப்திய அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews