யாழ் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது? என்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கொழும்பு துறைமுக திட்டத்துக்கு நிகராக வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய நிதி முதலீட்டில் குறித்த மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரைபடமும் தயாரிக்கப்பட்டது.
குறித்த துறைமுகத் திட்டம் மூலம் வடமாகாணத்தில் உள்ள நூற்றி நாற்பத்தி ஒரு கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ள 15ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், 35 ஆயிரம் வேலையற்ற இளைஞர் யுவதிகள் மற்றும் 15ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் என்ற எதிர்பார்ப்பில் திட்ட வரைபு தாயார் செய்யப்பட்டது.
4 வருடங்களுக்குள் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பில் பின்வரும் அம்சங்கள் குறித்த மீன்பிடித் துறைமுகத்தில் முதற்கட்ட வேலைகளுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்றது.
தாங்கி, துறைமுக தளம் மற்றும் அகழ்வு, நிறுத்தும் வசதிகள், காணி மீள் நிரப்பல், துறைமுக சுவர், சரி பாதை, வலை திருத்தம் மண்டபம், சன சமூக மண்டபம் மற்றும் சிற்றுண்டி சாலை, தனியார் விடுதிகள், துறைமுக முகாமையாளர் விடுதி,
மேற்பார்வை கட்டடம், ஏல விற்பனை மண்டபம், சுங்கக் கட்டிடம், மருத்துவ பகுதி, வாகனம் நிறுத்தும் பகுதி, பொது மலசல கூடம், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, எரிபொருள் வசதி, சுமைகளை இறக்கும் கட்டிடம், மின் உற்பத்தியாக்கி வசதி, ஆகிய வசதிகளை கொண்ட தான பாரிய துறைமுகத் திட்டமாக வரைபடம் தயாரிக்கப்பட்டது .
குறித்த திட்டத்தை செயல்படுத்தவிடாது சிலர் கடிதப் பரிமாற்றங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்தனர்.
எனினும் குறித்த திட்டத்தை செயல்படுத்துமாறு பருத்தித்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆசியா விருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் இந்தியாவும் சீனாவும் தமது விருப்பங்களை கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு மிகவும் அண்மையில் உள்ள பருத்தித்துறைக் கடற்பகுதியை அண்மையில் யாழ்.வந்த சீனத் தூதுவர் பார்வையிட்டமை இதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.