Tik Tok சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று தொடர்பாக இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் (03) பிற்பகல் மாதம்பிட்டிய ஒழுக்கை பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் மாதம்பிட்டிய வீதியிலுள்ள ஹேனமுல்ல ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு குழுவினரால்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டிக் டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.