விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சி…..!

(திருமலை)

விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்காமல் நழுவல் போக்குடன் இராணுவப் பிரசன்னத்துடனான பசுமை விவசாயக் கொள்கையினை முன்னெடுக்க அரசு முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன.
திருகோணமலை தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தின் 223ம் படைப்பிரிவின் கட்டளையதிகாரி ரவீந்திரா ஜயசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 9.00மணியளவில் தோப்பூர் கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்நௌசாத் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது 2022 ம் ஆண்டு சிறு போக செய்கையின் போது சேதன பசளை உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான பொறுப்பை ஜனாதிபதி இராணுவத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்த இராணுவ அதிகாரி விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார் இக் கலந்துரையாடலில் பங்குபற்றிய சம்மேளனப் பிரதிநிதிகள் பெரும்போகச் செய்கைக்கான நட்ட ஈடு வழங்கப்படாவிட்டால் விவசாயிகள் சிறுபோகம் தொடர்பில் சிந்திக்கத் தயங்குவார்கள் எனவும், பசுமை விவசாயக் கொள்கை உரிய நிபுணர்களினதும் விவசாயத்துறைசார் அதிகாரிகளினதும் வழிகாட்டுதல்களின்றி அதிரடியாக அமுல்ப்படுத்தப்பட்டமையினால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன் பசுமை விவசாயக் கொள்கையினை அமுல்ப்படுத்திய அரசு செய்கைக்குத் தேவையான களைநாசினி கிருமிநாசிகளை இறக்குமதி செய்யாமை மற்றும் அவற்றுக்கான விலை மாபியாக்களுக்கு இடமளித்துள்ளமையினால் விவசாயிகள் குறித்த பொருட்களைப் பெற முடியாது விரக்தியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். எவ்வாறாயினும் இராணுவம் சிறுபோகம் தொடர்பிலேயே கவனம் செலுத்துமெனவும்,  பெரும் போகத்துக்கான இழப்பீடுகள் தொடர்பில் அரசே தீர்மானிக்க வேண்டும் எனவும் இராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார்.

தமது அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இழப்பீடு கோரி மக்கள் நடத்தவுள்ள பாரிய போராட்டங்களையும் தவிர்த்துக் கொள்ளவே இந்த இராணுவப் பசுமை வேளான்மைக் கொள்கையுடனான சிறுபோக முன்னேற்பாடாகவே கருதுவதாக விவசாயிகள் கண்டணக் குரல் எழுப்புகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews