இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவை 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல் மழை பொழிவால் உயிரிழந்திருக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த புதைபடிவங்கள் ப்ளீஸ்டோசீன் காலத்து காண்டாமிருக மண்டையோடுகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் விஞ்ஞானி கெலும் நளிந்த மனமேந்திர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் முதல் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அக்கறை காட்டாதது கவலைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் படிமங்கள் 1996 ஆம் ஆண்டு 80 அடி ஆழமுள்ள ரத்தினச் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. நானும் அன்றைய தொல்லியல் பணிப்பாளர் நாயகமாக இருந்த கலாநிதி ஷிரான் தெரணியகலவும் அங்கிருந்து இரண்டு மண்டை ஓடுகளை சேகரித்தோம்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீடமும், புதைபடிவங்களை ஆய்வு செய்த கலாநிதி மொஹான் அபேரத்னவும் இது 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருகத்தின் புதைபடிவமே என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
80,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்த இந்த விலங்கு விண்கல் மழையால் உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தள்ள நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.