தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்., நல்லூரடியில் எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளான சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கக் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஊர்திப் பவனி இரண்டாவது நாளான இன்று வவுனியா நகர சபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்தவர்கள் நினைவாக பொங்கு தமிழ் தூபி முன்பாக தீபம் ஏற்றப்பட்ட பின் அங்கிருந்து புறப்பட்ட ஊர்தி வவுனியா நகரப் பகுதியில் வலம் வந்து அங்கிருந்து ஏ – 9 வீதியூடாகச் சென்று நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டது.
குறித்த ஊர்தியில் ‘ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தத்தை நிராகரிப்போம். சமஷ்டியை வலியுறுத்துவோம்’ எழுதப்பட்ட பதாதைகளும், எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ். நல்லூரடியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் மக்களை அணிதிரளுமாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்