அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள். யோகராசா கனகரஞ்சினி.

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தவைலி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
நீதி அமைச்சரின் வடக்கு வருகையானது தங்களது ஆட்பலத்தின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்தினுடைய மக்களையும் தரிசித்து வருகின்றார்கள்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினராகிய நாம் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம். ஏற்கனவே பல ஆணைக்குழுக்களை சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தும்  இதுவரை காலமும் எதுவிதமான தீர்வுகளும் எமக்க தராத நிலையில் இந்த நீதி அமைச்சின் அமைச்சர் எங்களிற்கு எப்படியான நீதியை தரப்போகின்றார்?
உண்மைக்கும் நீதிக்குமான இந்த தேடலை மழுங்கடிக்க செய்வதற்காகவும், வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரிலே தங்களையும், அரசையும் காப்பாற்றுவதற்காகவும், குறித்த கூட்டத் தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொண்டு  ஐக்கிய நாடுகள் சபையையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான முயற்சியே இந்த நீதி அமைச்சின் செயற்பாடாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த தாய்மாரை ஒருங்கிணைத்து, அவர்களிற்கு இழப்பீட்டை அல்லது மரண சான்றிதழை வழங்கி போராட்டத்தை இல்லாது செய்து அமைதியான நிலையை ஏற்படுத்துவதாகவே அவர்களின் வடக்கு வருகை இருக்கின்றது.
கொடூர யுத்தத்திலும், இன அழிப்பிலும் பாரிய இழப்புக்களை சந்தித்த மாவட்டங்களாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.பல்வேறு விடயங்களை உள்ளடக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
உண்மையாகவே பெறுமதியான சொத்துக்களை இழந்தவர்கள் தமது இழப்பிற்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அங்கு சென்றிருப்பார்கள். ஆனால் அவ்வாறு சொத்துக்களை இழந்தவர்களிற்கு அரசினால் வழங்கப்படுவது ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய விடயத்தையும் இதன் ஊடாக மேற்கொண்டு அவர்கள்களிற்கான இழப்பீட்டினையும், மரண சான்றிதழையும் வழங்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். இந்த ஏமாற்று திட்டத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஐக்கியநாடுகள் சபையை சமாளிப்பதற்காகவும், இலங்கை அரசை காப்பாற்றுவதற்காகவும் எங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குவதற்குமாகவே இவர்களது வருகை அமைந்துள்ளது. எங்களுடைய விலை மதிக்கத்தக்க முடியாத எமது உறவுகளிற்கு எவருமே விலை பேச முடியாது.
எங்களுடைய உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவும், சரணடைந்தவர்கள், கையளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்களை பல்வேறு தரப்பினருக்கு நாங்கள் கொடுத்துள்ளோம். அவர்களின் உண்மை நிலையை அறிவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணையையே நாங்கள் நம்பியிருக்கின்றோம்.
நாங்கள் அரசியலிற்கு செல்லவில்லை. எமது போராட்டத்திற்கும் அரசியலிற்கும் தொடர்பு இல்லை. பாதிக்கப்பட்ட தாய்மாரின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் எமது தாய்மாருக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் இன்று வரை, இந்த நிமிடம் வரை தட்டிக்கேட்காத பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews