அங்கஜன் அதிகார வரம்பை மீறி நடக்கின்றார்: இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் கண்டனம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் செல்வ குணபால செல்வத்தைப் பல அதிகாரிகள் முன்னிலையில் எச்சரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தொழிற்சங்கத்தின் தலைவர் புவிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்தில் பிரதான முகாமையாளரை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வீதிப் போக்குவரத்து தொடர்பான கூட்டத்துக்கு அழைத்து அப்போது புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு அங்கஜன் முரண்பட்டுள்ளார்.

எமது முகாமையாளரை கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாகக் கேள்வியைத் தொடுத்துப் பல அதிகாரிகள் முன்னிலையில் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்லாவிட்டால் முகாமையாளர் மாற்றச் செய்வேன் என அதிகாரியை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை எமக்கு பயத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது.

வட பிராந்தியத்தில் தமிழ் மொழி தெரிந்த பிரதான முகாமையாளர் இல்லாத காரணத்தினால் நாம் பல்வேறு கஷ்டங்களை ஊழியர்கள் அனுபவித்த நிலையில் மும்மொழி ஆளுமை உள்ள தமிழ் அதிகாரியை நியமித்தமையை அங்கஜன் தடுத்து வந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியைத் தொடர்ந்து தற்போதைய பிரதான முகாமையாளரை மீண்டும் சேவையில் இணைத்ததன் மூலம் எமது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது.

எமக்கு புதிய பேருந்து தரிப்பிடத்துக்குச் செல்வதில் பிரச்சினை இல்லை ஆனாலும் அது தனித்துவமான சேவையைப் பாதிக்கும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளை ஏற்றுக் கள்ள மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews