இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்..! முள்ளிவாய்க்காலில் இன்று ஒன்று கூடுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் அழைப்பு.. |

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இது எமக்கான சுதந்திர தினம் அல்ல, எமக்கான நீதி கிடைக்கப் பெறாத இடத்தில் எவ்வாறு சுதந்திரம் கிடைக்கும். பொதுமக்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருக்காது ஒன்று கூடி இந்த கறுப்பு நாளை அனுஷ்டிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் என்பதை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்து வந்துள்ளனர். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு இன அழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலே எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாமல், அரசியல் நோக்கங்கள் இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். இதில் மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகத்தினர்,பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள்,மாதர் சங்கங்கள்,விளையாட்டுக் கழகங்கள் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் கட்சிகள் என்பன பங்கேற்க வேண்டும் எனவும்

எமது இயக்கமும் இதற்கு பூரண ஆதரவை வழங்குகிறது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். ஒரே நாட்டிலேயே ஒருபுறம் ஆரவாரம் வெற்றிக்கொண்டாட்டம் மகிழ்ச்சி என்பன காணப்படும்போது இன்னொரு புறத்தில்

கவலை வறுமை பொருளாதார பின்னடைவு போன்றன காணப்படுகின்றதெவும் இதனை நாங்கள் இரண்டு நாளாக அனுஷ்டிக்கிறோமென மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா அரசுக்கு தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரமே சுதந்திர தினமாகும்.

1956 சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய திருமலை நடராஜன் படுகொலையோடு உயிர்ப்பலி என்பது ஆரம்பித்துவிட்டது. தமிழ் இன ஒடுக்குமுறைக்கு நூறு வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எம்மை ஒடுக்கினார்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன்

நம்மை ஒடுக்குகிறார்கள் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகள் பிரச்சினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அடுத்த வருடங்களில் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்க வேண்டிய தேவை இருக்காது.

இன்றைய  தினத்தில் தனித்தனித் போராட்டங்களை முன்னெடுக்காமல் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு வலுச்சேர்க்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு உடையணிந்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதுடன்

வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.இவ் ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க யாழ் மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை, உபதலைவி நிர்மலநாதன் மேரி ரஞ்சினி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள்,மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு றொபேர்ட் சசிகரன்,சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம்,

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஆகியோர் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews