கட்சி பேதம், அரசியல் பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மீனவர்கள் கோரிக்கைக்கு காத்திரமான தீர்வை வழங்கும் முயற்சியில் இறங்கவேண்டும். என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
நேற்றய தினம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வடபகுதி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளால் நமது கடல் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. நித்தமும் எமது தொழில் வளங்கள் அழிக்கப்பட்டுவருவது தொடர்கதையாகிறது.
இக்கையறு நிலையில் தான் மீனவ சமுதாயயம் 5வது நாளாக தொழில் மறிப்பு மற்றும் தொடர் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தோம். கடற்றொழில் அமைச்சராக வடபகுதியை சேர்ந்த தமிழர் பதவி வகிக்கும் நிலையில் தான் இந்தத் துயரம் நடந்து வருகிறது.
அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வடபகுதி மீனவர் சமுதாயமாக இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு கூறி வந்துள்ளோம். நாம் கேட்பது இலங்கைத்தீவின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை.
இந்த கோரிக்கையானது இலங்கை கடற்பரப்பின் மீதான இறையாண்மையை இலங்கை கடற்படை கட்டிக்காக்க வேண்டும் என்பதுடன் அதன் மூலம் வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரத்திற்கு தீர்வையே வலியுறுத்தி நிற்கின்றது.
எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் உத்தரவாதத்தையே தர முடியாத நிலையில் அமைச்சர் எவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவ் விடயத்திற்கு பொறுப்பான ஒருவர் என்ற வகையில் இந்திய படகுகளின் சட்டவிரோத உள்நுழைவை தடுக்க முடியாவிடில் அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்பதே வட பகுதி மீனவ சமுதாயத்தினர் ஆகிய எமது உறுதியான நிலைப்பாடு.
தமிழர் அமைச்சராக இருந்தும் தீர்வு கிட்டாத நிலையில், எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க வேண்டுகோளொன்றை விடுக்கின்றோம்.
அரசியல் கட்சி பேதமின்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்விடயத்தில் காத்திரத் தன்மையை உணர்ந்து நிரந்தர தீர்வை காணும் வகையில் செயற்படுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்.
கடல் நீரோடு நீராக கரைந்து காணாமல் போகும் மீன்களின் கண்ணீர் துளிகளாக வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரமும் எமக்குள்ளாகவே கரைந்து ஓடும் அவலமே தொடர்கிறது.இந்த துயரத்துக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்று எமது வாழ்வாதாரத்தை உயிர்களையும் பாதுகாக்குமாறு வினயமாக வேண்டி நிற்கின்றோம்.
இந்திய படகுகளின் எல்லை மீறல் மீண்டுமொரு அனர்த்தம் வடக்கு கடலில் நிகழுமாயின் நமது போராட்டம் மீண்டும் அறவழியில் தொடரும். எமது இப் போராட்டம் எது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காகவே தமிழக உறவுகளுக்கு எதிரானது அல்ல என்றுள்ளது.