ஓய்வூதியம் பெற்றுச்சென்ற 12,483 பேருக்கு இதுவரை ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் ஓய்வூதியம் பெற்றுச் செல்பவர்களுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தால், ஓய்வூதிய கொடுப்பனவில் 24இல் ஒரு பங்கு ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெற்றுச் செல்பவர்கள், இந்த ஊக்குவிப்புத் தொகையை வைத்துக்கொண்டே தங்களது ஏனைய பணிகளை முன்னெடுக்கின்றனர்.
சிலர் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு வீட்டு நிர்மாணப் பணிகளை நிறைவு செய்கின்றனர். தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நடத்துகின்றனர்.
இவ்வாறு பல்வேறு விடயங்களுக்கு இந்த ஊக்குவிப்புத் தொகையை ஓய்வூதியம் பெற்றுச் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ஓய்வூதியம் பெற்றுச்சென்றவர்களின் ஓய்வூதிய ஊக்குவிப்புக் கொடுப்பனவை ஓய்வூதியத் திணைக்களம் வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
விசேடமாக 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிவரை 12,483 பேருக்கு 1,334 கோடி ரூபாயை, ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையாக வழங்க வேண்டியுள்ளது.
தற்போதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. நாளுக்கு நாள் அரச சேவையிலிருந்து பலர் ஓய்வூதியம் பெற்றுச்செல்கின்றனர்.
உண்மையில் இது பாரிய பிரச்சினையாகும். இதற்குப் பின்னரும் இந்த நிலைமையே தொடரப் போகின்றது.
இதற்கு முன்னரும் குறிப்பாக 2014, 2018ஆம் ஆண்டுகளில் வங்கிகளில் கடன்பெற்று எழுபத்துமூவாயிரம் கோடி ரூபாயை ஒய்வூதிய ஊக்குவிப்புத் தொகையாக அரசாங்கம் வழங்கியது.
அரசாங்கம் இவ்வாறு ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்காமல் விடுவதுடன் ஒய்வூதிய கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஓய்வூதியம் பெற்றுச் செல்பவர்களுக்கு இது பாரிய பிரச்சினையாகும். பாரிய தொகையையே அரசாங்கம் வழங்காமல் உள்ளது.
எனவே ஓய்வூதியம் பெற்றுச் செல்பவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக ஓய்வூதிய ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்