அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 240 ரூபா வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தங்களது உறவினர்கள் செலவு செய்வதற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் கூடுதலாக பணம் அனுப்பி வைப்பது வழமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டில் தற்பொழுது டொலர் பெறுமதி தொடர்பில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளினால், வெளிநாடுகளில் பணியாற்றுவோர் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பணம் அனுப்பி வைக்க முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்நிய செலாவணி கையிருப்பில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் ஒரு டொலருக்கு 240 ரூபா செலுத்தப்பட்டால் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்புக்களின் ஊடாக சட்ட ரீதியாக பணம் அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 10 ரூபா வழங்கப்படுவதாகவும், இந்த தொகையை மேலும் 30 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.