இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘இலங்கை பற்றி பேசுங்கள்’, ‘போதும் போதும்’, ‘விழித்தெழுவோம்’ ‘சிறப்பாக செய்தது போதும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதனால் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. குறிப்பாக எமது பணிகளை முறையாக ஆற்ற முடியவில்லை. தொடர்ச்சியாக இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே ஏழு இளைஞர்கள் இணைந்து திங்கட்கிழமை முதல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டத்தில் 30 பேர் கலந்துகொண்டனர். அதன் பின்பு 50 பேர் வந்தனர். தற்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது.
நாங்கள் எந்த கட்சியையும் எந்தக் குழுக்களையும் சேர்ந்தவர்கள் அல்ல. நாம் இந்த இடத்தில் நின்றுக்கொண்டிருந்ததை கண்டே அநேகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவே இந்த இடத்தில் கூடியுள்ளனர்.
நாம் எதிர்கொண்டு இருக்கும் பிரச்சினைகளிலிருந்து எம்மை வெளியில் கொண்டுவருமாறே நாம் அரசாங்கத்தை கோருகின்றோம்.
கொஹூவளை பிரதேசத்தை சுற்றியுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை சற்று பாருங்கள். எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பது தெரியும்.மக்கள் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.