அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது.
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 12 நாட்களாக நீடித்துள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையிலேயே, தமக்கு எதிரா நிலைப்பாட்டை எடுத்ததால் தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து 17 நாடுகளை நீக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நோர்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷ்ய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.