பொதுமக்களுக்கு சொந்தமான ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணியினை தனியொருவருக்கு வழங்குவதற்காக நில அளவை திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்தால் குறித்த காணிகளினை அளவீடு செய்வதற்கான முயற்சியினை புளியங்குளம் பொதுமக்களும், காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம், ராமனூர் மற்றும் நாவற்குளம் குளங்களினுடைய வயற்காணிகள், பழையவாடி- புளியங்குளம் வீதியிலுள்ள பொதுமக்களின் மேட்டுக்காணிகள், வயலுக்கு செல்லும் வீதிகள், பொதுமக்களின் மேய்ச்சல் தரைகள் உள்ளடங்கலான 50 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இச் செயற்பாட்டிற்காக காணிகளை அளவீடு செய்ய முயன்ற போது பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன், குறித்த காணிகள் அமைந்துள்ள லக்சபானா மின்சார இணைப்பின் கீழான பகுதி அளவீடு செய்வதன் மூலமும், அதன் கீழ் பயிர்ச்செய்கை செய்வதன மூலமும் ஏற்படும் சூழல் சார் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டி பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினையடுத்து நில அளவைத்திணைக்களம் மற்றும் பிரதேசசெயலக காணிப்பிரிவினர் குறித்த அளவீட்டு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச்சென்றுள்ளனர்.
குறித்த விடயத்தினை நிறுத்துமாறு பொதுமக்களால் கையொப்பமிடப்பட்டு வவுனியா வடக்குப்பிரதேச செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோகர் சு.காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.