நாங்கள், கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்த நிலையில் யுத்தம், இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்துவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோ ம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன் தெரிவித்தள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மொழியில் இங்கிதம் என்று சிறந்த சொல் உண்டு. இந்த சொல்லை பெரும்பாலும் பயன்படுத்துவது குறைவு. சபை அறிந்து நடந்து கொள்வதைதான் இங்கிதம் என்று சொல்வர். நாங்கள் பார்க்கும் திரைப்படங்கள், நாடகங்கள் அல்லது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விடயங்களை நாங்கள் பார்க்க முடியாது உள்ளது. ஆனால் அதனை நாங்கள் தவிர்க்கின்றோமா எனில் இல்லை என்றே சொல்ல முடியும்.
இன்று உரிமையை பற்றி கேட்கும் நாங்கள் எமது பொறுப்புக்களையும் நிலைநிறுத்தியே கேட்க வேண்டும். உதாரணமாக ஒரு உத்தியோகத்தர் தனக்கு விடுமுறை வேண்டும் என கோருவார். ஆனால் மறுநாள் செய்து முடிக்க வேண்டிய வேலை தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு.
நாங்கள் எப்பொழுதும் எமது உரிமைகள் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றோமே யன்றி பொறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது இல்லை. இந்த நிலைமை வீட்டிலும், நாட்டிலும், சமூகத்திலும் இருக்கும். நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம். கூட்டுக்குடும்பமாக வாழாவிட்டாலும் உறமுறைகளை கொண்ட தள்ளி வாழும் வாழ்க்கை முறையை கொண்டிருந்தோம். இவ்வாறான இடங்களில் உரிமைகள் மீறப்பட்டது குறைவாகவே உள்ளது. சில இடங்களில் ஒருவருக்கு கூடுதலாகவும், மற்றவருக்கு குறைவாகவும் காணப்படுகின்ற நிலைமையும் உள்ளது.
சீதனம், மாமியார் மருமகள் பிரச்சினைகளை பார்க்கின்றபொழுது பெண்களிற்கான உரிமைகள் பெண்களாலேயே மீறப்படுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றது.
போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு 30 ஆண்டுகள் காலப்பகுதி தேவைப்படும் என்ற நிலை இருக்கின்றது. நாங்கள், கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்தோம். இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்துவிட்டது. யுத்தம் எங்களை முழுமையாக பாதித்துவிட்டது. இப்பொழுது நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோ ம்.
எங்களிற்கு முழுமையாக வீடுகள் புனரமைக்கப்படவில்லை. அடுத்த சந்ததி ஒன்று உருவாகும்பொழுதுதான் இவற்றை முழுமையாக்கலாம். அதனால்தான் இங்கு இளவயது திருமணங்கள், தற்கொலைகள், நுண்கடன் பாதிப்புக்களெல்லாம் கூடுதலாக இருக்கின்றது. ஆனால் அதிகாரிகள் என்ற வகையில் இவற்றை மாற்றியமைக்க வேண்டிய கடமை எங்களிற்கு இருக்கின்றது.
பெண் மாற்றுத்திறனாளிகளிற்கான போக்கு வரத்து, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட விடயங்கள் இன்று கதைக்கப்பட்டது. அதில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் மாவட்ட செயலகத்தில் உள்ள மனிதவலு அலுவலகத்துடன் தொடர்புகொண்டால் எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்திருந்தார்.