பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் அறிவுறுத்திய பின்னரும் சில பிரதேச செயலகங்களில் வைத்து சமையல் எரிவாயு விநியோகம் நேற்றய தினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் எரிவாயு விநியோக நிறுவனம் ஒன்று நகர்பகுதியில் உள்ள தனது இடத்தில் வைத்து எரிவாயு விநியோகத்தை முன்னெடுத்திருந்தது. அங்கு வைத்து அதனை முன்னெடுக்கவேண்டாம் எனவும் அந்த விநியோக நிறுவனத்தின் பிரதேச முகவர்களுக்கு எரிவாயு சிலின்டர்களை பகிர்ந்து வழங்கி விநியோகத்தை சீராக்குமாறும் மாவட்டச் செயலர் க.மகேஸன் ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் எரிவாயு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் பிரதேச செயலகங்களை நாடி பிரதேச செயலக ஊழியர்களுக்கு எரிவாயு சிலின்டர்கள் தருவோம் என கூறியுள்ளது.
பிரதேச செயலக ஊழியர்கள் பெற்றுக் கொண்டதன் பின்னர் எஞ்சியதை மக்களுக்கு வழங்குமாறு அந்நிறுவனம் கூறியுள்ளது. எரிவாயு விநியோகம் தொடர்பாக மாவட்டச் செயலரினால் எந்தவொரு சுற்றறிக்கையும் பிரதேச செயலர்களுக்கு அனுப்பப்படாத நிலையில் பிரதேச செயலாளர் எரிவாயு நிறுவனத்தின் வியாபாரத்தை தமது பிரதேச செயலகங்களில் நடாத்த அனுமதி வழங்கியுள்ளனர். எந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது என்பது தொடர்பான எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் எரிவாயு சிலின்டர் விநியோகம் யாழ்.மாவட்டத்தில் சில பிரதேச செயலகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதேச செயலகங்கள் எரிவாயு சிலின்டர் விநியோகிக்கும் கள்ள சந்தைகளாக மாறிவிட்டனவா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.