அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் : பொலிஸார் குவிப்பு

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு

கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏற்றி  இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சமன் தலைமையில் இரவு 7.15 மணிக்கு இடம்பெற்ற இப் பேராட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஊரடங்கு சட்டத்தை மீறி பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடிக்கு எதிர்ப்பு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.

இதன் போது அவர்களை பல்கலைக்கழக வாசலில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போராட்டகாரர்கள், அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு தீப்பந்தம் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேவேளை அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

நீர்கொழும்பு

இந் நிலையில் நீர்கொழும்பு மாநகர சபைத் தலைவர் இல்லத்திற்கு முன்பாகவும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தற்பொழுது குறித்த பகுதியில் பெருந்திரளான இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயவர்த்தனபுர – கோட்டே மாநகர சபைக்கு முன்னால் ஒன்றுதிரண்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தற்பொழுது குறித்த பகுதியில் பெருந்திரளான மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில்  பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews