மிக அமைதியான முறையில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால் திட்டமிட்ட வன்செயல்களை துாண்டும் வகையில் செயற்படும் குழுக்கள் தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளார்.
விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,நாட்டில் காணப்படும் அமைதியற்ற நிலைமைக்கு மத்தியில் பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்களின் ஜனநாயகம் எனக் குறிப்பிட்டு அமைதியான முறையில் சில ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இதனை அடிப்படையாகக் கொண்டு இரு குழுக்கள் செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய இவற்றில் ஒரு குழு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற போதிலும் , பிரிதொரு குழு அரசாங்கத்தின் பொது சொத்துக்களுக்கும் சிலரது தனிப்பட்ட சொத்துக்களுக்கும் சேதம் விளைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட வன்முறை செயற்பாடுகள் இந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் உள்ள போதிலும் , அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கக் கூடிய மக்களுக்கான உரிமையை எம்மால் அனுமதிக்க முடியும்.
ஆனால் இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும் அசௌகரியத்தினை ஏற்படுத்தி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வன்முறை சம்பவங்கள் ஜனநாகத்திற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளாகவுள்ளன.
இதன்போது குறிப்பிட்ட சில குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று வீடுகளுக்கு கல்வி வீச்சு தாக்குதல்களை மேற்கொள்வதோடு , பெற்றோல் குண்டு தாக்குதல்களை மேற்கொள்கின்றமையும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று மேலும் சில குழுக்கள் வீடுகளில் கொள்ளையடித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களுடைய வீடுகளில் கூட இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதை கவலையுடனேனும் தெரிவிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன முப்படையினருடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை நாம் அனுமதிக்கின்றோம். அதேவேளை ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பு அமைச்சு அதன் கடமையை நிறைவேற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாட்டில் அமைதியை ஸ்திரப்படுத்துவதற்கும் , வன்முறையை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பாதுகாப்பு படையினரும் , பாதுகாப்பு அமைச்சும் பின்நிற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜனாநாயக போராட்டங்களில் ஈடுபடும் போது அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் செயற்படுமாறு பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை வெவ்வேறு நோக்கங்களுக்காக மக்களை தூண்டிவிடும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.