அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா எனவே தாம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே நான் கருத்துரைக்க விரும்புகின்றேன். தற்போதைய நிலையில் அமைச்சர்கள் தனிப்பட்ட ரீதியில் பதவி விலகியுள்ளதாக கூறிய போதிலும் அது சட்டரீதியான பதவி விலகலாக இல்லை.
சட்டத்துக்கு அமைவாக எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சகலருக்கும் தெரியும். நாட்டில் அரசாங்கம் தொடர்பில் திருப்தியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த அதிருப்தி நிலையை இந்த பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பாராளுமன்றம் இதனை புரிந்துகொள்ளவில்லையாயின் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவே அர்த்தப்படும். எனவே நாம் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம்.
பாராளுமன்றத்தில் ஒரு குழுவாக சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.