இன்று (06.04) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசலை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் காத்திருந்த போது டீசல் நிறைவடைந்துள்ளதாக எரிபொருள் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
டீசல் இருந்த போதிலும், தற்போது டீசல் நிறைவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறுவதாகத் தெரிவித்து சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் குறுக்கே இரு பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. சம்பவ இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் உடனடியாக வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருடன் கலந்துரையாடினர். அத்தியாவசியத் தேவைக்காக டீசல் இருப்பதாக இதன்போது முகாமையாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2500 லீட்டர் டீசல் வாகனங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையையடுத்து ஏ9 வீதியின் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.