த.தே.கூ ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும்!- சித்தார்த்தன்.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.

போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இணுவில் பகுதியில் இடம்பெற்ற புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் அண்மையில் உயிரிழந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அமரர் சு. சதானந்தம் அவர்களின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மத்திய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சிவநேசன் உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews