வடக்கு ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை!

கல்வியியல் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு சொந்த மாகாணத்தில் நியமனம் இல்லை என்ற நிலைப்பாடு திட்டமிட்ட பழிவாங்கும் செயல்பாடு. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப் பிரதேச பாடசாலைகளில் பெருமளவான ஆசிரிய பற்றாக்குறை உள்ளது. அங்கு கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து, அவர்களில் பலருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இன்னும் வன்னிப்பிரதேசத்தில் ஆசிரிய பற்றாக்குறை அதிகரித்த நிலையில் வடக்கு மாகாணத்தை சொந்த வாழ்விடமாக உள்ள ஆசிரியர்களை அவர்கள் அறியாத தென்பகுதி ஊர்களுக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன.

இது ஓர் இனவாத அல்லது பழி தீர்க்கும் கருமமாகவே பார்க்கிறோம். தயவு செய்து இப்போதுள்ள நாட்டுச் சூழ்நிலையில் அவர்களை அவர்களது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற அனுமதியுங்கள். இங்குள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள்.

இதுபற்றி வடக்கு மாகாணம் சார்ந்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் கதைக்க வேண்டும். என இலங்கைத் தமிழர் ஆசிரியர்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews