அரசுக்கு நிர்ப்பந்தங்களை விதிப்பதற்கு உகந்த காலம் இதுவல்ல..! சித்தாத்தன் எம்.பி.

அரசாங்கத்திற்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விடயத்தில் தமிழரசு கட்சி தனித்து செயற்படாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படுவது பலமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  தற்போதைய ஆட்சியாளருக்கு எதிராக குற்றப்பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் நடவடிக்கையில் தமிழ் அரசுக் கட்சி தானாக ஒரு முடிவை எடுப்பதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பாக எடுக்கப்போகும் முடிவு பலமானதாக இருக்கும். தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தாமாகவே முன்வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மக்கள் போராட்டத்தின் விளைவாக அரசாங்கம் முன்பு இருந்ததைவிட கீழே இறங்கி முடிவுகளை எடுப்பதற்கு தயாராகி விட்டார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவதற்கு மனமில்லை என்றாலும் கடந்த காலங்களில் பேசாதவர்கள் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான போராட்டங்கள் இடம் பெறாவிட்டாலும் மக்கள் பொருளாதார நெருக்கடியை உணர ஆரம்பித்து தாமாகவே போராட்டத்தில் இறங்குவார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றார்கள். நிபந்தனை விதிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.

அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews