தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைப்பதற்கு விளக்கம் கேட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் இன்றைய தினம் வியாழக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிமனையில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த முற்பதாம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்து பின்னர் ஒன்றரை மணித்தியாலங்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலேயே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன் என்றும்,
பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணை என்பது என் மீது தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்
கடந்த வருடம் ஜூன் மாதமும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைத்து என்னை இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி நான் விடுதலை ஆக்கப்பட்ட பின்னர் நான் மத வழிபாட்டுக்காக இந்தியா செல்ல முற்பட்ட பொழுது என்னை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கி உள்ளதாக தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை கைது செய்தார்கள்.
அதன் பின்னர் இந்த பயண தடையை நீக்குவதற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து விடுவிக்கப்பட்டு இருந்தேன்.
கடந்த 30ஆம் திகதியும் இவ்வாறான ஒரு செயற்பாடு இடம்பெற்றிருந்தது.
அதற்கு அப்பால் எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
ஆறு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு குறித்த 6 வருடங்களின் பின்னரும் நீதிமன்றத்தால் குற்றமற்றவன் என தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு இருந்த நிலையில் இவ்வாறான சூழலில் இவ்வாறான விசாரணைகளின் போது எனக்கு உளரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
என்னுடைய செயற்பாடுகளை முடக்குவதற்காகவோ அல்லது ஏதோ ஒன்றை என்னிடம் இருந்து தேடுகின்றார்கள். அதாவது ஏதோ ஒரு குற்றச்சாட்டை வைத்து என்னை கைது செய்ய முனைகிறார்கள் என்ற ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றியுள்ளது.
இதன் காரணமாகவே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்