மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா “ என்று. தமிழ்மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார்.
அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு.எப்படியென்றால் 83ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த சாம்பலில் இருந்து அவர் மறுபடியும் முளைத்தெழுந்தார். அவரோடு சேர்ந்து தொழிலைத் தொடங்கிய அவருடைய சகோதரர் போன்றோர் ஜூலை அழிவுகளின் பின் புலம் பெயர்ந்து போய் விட்டார்கள். ஆனால் ராஜ மகேந்திரன் தான் வேர் கொண்ட இடத்திலேயே தொடர்ந்து நிலைத்து நின்றார். தன் சொந்த சாம்பலிலிருந்து ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பினார். தனது ஊழியர்களிடம் அவர் அடிக்கடி கூறுவாராம் எனது சொத்துக்களை எரித்தார்கள். எனினும் நான் மீண்டு எழுந்தேன் என்ற தொனிப்பட.
அவருடைய அரசியல் தொடர்பில் கேள்விகள் உண்டு. அவர் பிரேமதாசாவுக்கு நெருக்கமானவர். கொழும்பு சிங்கள உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர்.அவருடைய இரண்டாவது மனைவி ஒரு சிங்களப் பெண். அவருடைய புதல்வர்கள் திருமணம் செய்ததும் சிங்களப் பெண்களைத்தான். அவர் ஒரு தமிழராக பிறந்தாலும் வாழ்க்கை முறையால் சிங்கள உயர்குழாத்தில் ஒருவராக மாறி விட்டிருந்தார். இக்கட்டுரை அவரை ஒரு தமிழ் தேசியவாதியாக முன்னிறுத்தவில்லைமாறாக தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ஓர்மத்தின் முன்னுதாரணமாகவே அவரை முன்னிறுத்துகிறது.
பிரேமதாசவுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம்தான் அவருடைய எஸ்.சிலோன் பைப் கொம்பனி அதிகம் எழுச்சிபெறக் காரணம் என்று ஒரு விளக்கம் உண்டு. பிரேமதாசவின் கிராம உதயம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடுகளுக்கு பிளாஸ்டிக் குழாய்களை மகாராஜா கொம்பெனியே விநியோகித்தது என்றும் அதுவும் அந்த நிறுவனம் அதிகம் லாபம் அடைய ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அவரை அவருடைய ஊடக குழுமத்தை யு.என்.பிக்கு சார்பானதாகவே உலகம் பார்க்கிறது. யூ.என்.பிக்கும் அவருக்குமுள்ள நெருக்கமும் சிங்கள உயர் குழாத்தில் அவர் பெற்றிருந்த முதன்மையும்தான் அவரை எதிர்க்கட்சிகளை துணிந்து அம்பலப்படுத்தும் ஓர் ஊடக முதலாளியாக நிலைநிறுத்தியது.
அவரை அவருடைய ஊடக குழுமத்தை யு.என்.பிக்கு சார்பானதாகவே உலகம் பார்க்கிறது. யூ.என்.பிக்கும் அவருக்குமுள்ள நெருக்கமும் சிங்கள உயர் குழாத்தில் அவர் பெற்றிருந்த முதன்மையும்தான் அவரை எதிர்க்கட்சிகளை துணிந்து அம்பலப்படுத்தும் ஓர் ஊடக முதலாளியாக நிலைநிறுத்தியது. ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்ததும் 2006 அளவில் அவருடைய முகத்துடன் புலி வாலை இணைத்து கொழும்பில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவருடைய சகோதரியின் கணவன் ஆகிய நடேசன் சத்தியேந்திராவிற்கும் தமிழ் ஆயுதப் போராட்டத்துக்கு இடையிலான நெருக்கத்தை குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ராஜ மகேந்திரன் பின்வாங்கவில்லை.
அவருடைய ஊடக தர்மம் குறித்து விமர்சனங்கள் உண்டு.அவரை தமிழ் ஊடக தாதா என்று விமர்சிப்பவர்கள் உண்டு.மேலும் தென்னிந்தியாவின் வர்த்தக குப்பைகளான நாடக சீரியல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தவர் என்ற விமர்சனமும் உண்டு.ஆனாலும் ராஜமகேந்திரன் ஒரு முதலாளியாகவும் சிங்கள அரசியலில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரூடகக் குழுமத்தின் தலைவராகவும் கொழும்பில் நிமிர்ந்து நின்றார். எரித்த இடத்திலேயே மீளத் துளிர்த்து பெரு விருட்சமாக வளர்ந்து காட்டினார்.அது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் முதலாளிகளுக்கு மட்டுமல்ல முழு தமிழ் மக்களுக்கும் ஒரு குறியீட்டு உண்மையை உணர்த்துகிறது.எந்த தலைநகரத்தில் இருந்து தமிழ் மக்களை குறிப்பாக தமிழ் முதலாளிகளை துரத்த வேண்டும் என்று திட்டமிட்டு 83 ஜூலை அழிவுகள் முன்னெடுக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் பீனிக்ஸ் பறவை போல ஒரு தமிழர் மீண்டும் எழுந்தார்.
இது ஜூலை 83ஐ நினைவு கூரும் காலம். ஜூலை 83ஐ நினைவு கூர்வது என்பது இனப்படுகொலையை நினைவு கூர்வதுதான். தென்னிலங்கையில் தமிழ் மக்கள் பெற்றிருந்த பொருளாதார மற்றும் சமூக முக்கியத்துவத்தை அழிக்கும் நோக்கத்தோடு மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை அது. அதைக் கலவரம் என்று அழைக்க முடியாது. ஏனென்றால் கலவரம் எனப்படுவது சம்பந்தப்பட்ட இரு சாரரும் கைகலப்பில் ஈடுபடுவது. ஆனால் அது தென்னிலங்கையில் நிராயுதபாணிகளாக நின்ற தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு தாக்குதலே.கொழும்பை தங்களுடைய தலைநகரமாகவும் தென்னிலங்கையை தமது தாயகமாகவும் நம்பிய அப்பாவித் தமிழர்களை அவர்கள் கொன்றொழித்தார்கள். அவர்களுடைய சொத்துக்களை எரித்து அழித்தார்கள். உங்களுடைய தாயகம் காங்கேசன் துறைக்கப்பால் இருக்கிறது போங்கள் என்று கூறி கப்பலில் ஏற்றி அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
83 ஜூலை எனப்படுவது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாவது தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என்ற உண்மையை அது உணர்த்தியது.இரண்டாவதாக இலங்கைத்தீவு பல்லினத்தன்மை மிக்கது அல்ல என்ற ஒருண்மையை வெளிக்காட்டியது. மூன்றாவதாக அது இந்திய தலையீட்டுக்கு வழிவகுத்தது. நாலாவதாக தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது அலையைத் தொடக்கி வைத்தது.இந்த நான்கு விளைவுகளின் தொகுப்பே பின்வந்த தசாப்தங்களும் ஈழப்போரும் ஆகும்.
முதலாவதாக தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்த்தியது. ராஜ மகேந்திரன் அப்போதிருந்த அரசாங்கத்தின் பிரதமரான பிரேமதாசாவுக்கு நெருக்கமானவராக காணப்பட்டார்.எனினும் இரத்மலானையில் அமைந்திருந்த அவருடைய எஸ்.லோன் கொம்பனி எடுக்கப்படுகையில் அதை தடுக்கவோ காப்பாற்றுவோ பிரேமதாசாவால் முடியவில்லை. அதுதான் அன்றைக்கிருந்த கொழும்பு யதார்த்தம்.
ஜூலை 83இன் மூலம் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்கள். அது என்னவென்றால் பல்லினத் தன்மை மிக்க ஒரு தீவை கட்டியெழுப்ப நாங்கள் தயாரில்லை என்பதுதான். இது இலங்கை தீவை உலக அளவில் அவமானப்படுத்தியது. இது முதலாவது மற்றும் இரண்டாவது விளைவுகள்
மூன்றாவது விளைவு இந்தியத் தலையீடு. ஜூலை 83ஐ முன்வைத்து இலங்கை தீவின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டது.அதன் உச்சகட்டம்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை.அதற்குப் பின்னரும் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன. இன்றுவரை அந்த விளைவுகளைத்தான் இலங்கைத் தீவு அனுபவிக்கிறது. முதலில் இந்தியா இறங்கியது.பின்னர் ஸ்கண்டிநேவிய நாடுகளும் ஜப்பானும் அமெரிக்காவின் கருவிகளாக இறங்கின. இப்பொழுது சீனா இறங்கியிருக்கிறது.அதன் மெய்யான பொருளில் இலங்கைத்தீவு அதன் இறமையை இழந்துவிட்டது. அது இப்பொழுது பேரரசுகளால் பிச்சுப் பிடுங்கப்படும் ஒரு அப்பம்.
அதாவது 83 ஜூலையில் இருந்து தொடங்கி இலங்கைத்தீவு அதன் இறமையை இழக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாத தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மொத்தத்தில் இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த இறமையையும் இழந்துவிட்டார்கள். இது 3வது விளைவு.
நாலாவது விளைவு புலப்பெயர்ச்சி. தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் இரண்டாவது அலை 83 ஜூலையில் இருந்து தொடங்கியது. இலங்கைத்தீவு தமக்கு பாதுகாப்பான ஒரு நாடு அல்ல என்பதை உணர்ந்த தமிழர்கள் அதிகரித்த அளவில் அலையலையாக புலம்பெயரத் தொடங்கினார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் ராஜமகேந்திரனின் சகோதரர் இருந்தார். ஆனால் ராஜமகேந்திரன் இருக்கவில்லை. இப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாக பரவிச் சென்றார்கள். ஆனால் சில தசாப்தங்களுக்குள்ளேயே உலகின் கவர்ச்சிமிக்க புலம்பெயர் சமூகமாக மேலெழுந்தார்கள். துடிப்பான, அரசியல் ஆர்வம் மிக்க, முதலீட்டு ஆர்வம் மிக்க, கடுமையாக உழைக்கின்ற, சாதிக்க வேண்டும் என்ற தாகமுடைய. தமது தாயகத்தை புலம்பெயர்ந்த நாடுகளில் ஊறுகாய் போட்டு வைத்திருக்கின்ற ஒரு டயஸ்போறாவாக தமிழர்கள் மேலெழுந்தார்கள்.
எந்த தலைநகரத்தில் இருந்து அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்களோ அதே தலைநகரத்தை நோக்கி வெளிநாட்டு பிரஜைகளாக டொலர்களோடு வந்திறங்கினார்கள். எந்தத் தலை நகரத்தில் அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டனவோ அதே தலைநகரத்தில் டொலர்களை கொடுத்து புதிய சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். குறிப்பாக ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் தென்னிலங்கையில் நிதி ரீதியாக வங்குரோத்தாகிய சிங்களக் கொம்பனிகளை வாங்கும் சக்தி மிக்கவர்களாக மேலெழுந்தார்கள்.
இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் எனப்படுவது உலகின் கவனிப்புக்குரிய ஒரு மக்கள் கூட்டமாக எழுந்துவிட்டது.அதுமட்டுமல்ல புலப்பெயர்ச்சியே தங்களை மேலும் பலப்படுத்தியிருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.அது தோற்கடிக்கப்பட முடியாத ஒரு மக்களாக தமிழ் மக்களை நிரூபித்திருக்கிறது.தென்னிலங்கையின் நகரங்களில் ரூபாய்களோடு திரிந்த தமிழர்களை ஜூலை 83 டொலர்களோடு திரிபவர்களாக மாற்றியிருக்கிறது. அதாவது ஜூலை 83 இல் தென்னிலங்கையிலிருந்து தமிழ் மக்களைத் துரத்தியவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியவில்லை என்பதைப் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிரூபித்திருக்கிறது.
இப்படிப்பட்டதோர் அரசியல் சமூகப் பொருளாதார பின்னணியில் ராஜமகேந்திரன் புலம் பெயராது தனது சொத்துக்கள் எரிந்த சொந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழமுடியும் என்பதனை கொழும்பில் தொடர்ந்தும் வசித்தபடியே நிரூபித்தார். அவருக்கும் யூ.என்.பிக்கும் இடையிலான உறவும் சிங்கள உயர் குளாத்தில் அவருக்கிருந்த முதன்மையும் அதற்குப் பக்கபலமாக இருந்தன.எனினும் தமது சொந்த சாம்பலிலிருந்து தமிழர்கள் மீண்டும் உயிர்த்தெழ முடியும் என்ற நம்பிக்கையை அவர் தமிழ் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய அரசியலை குறித்தும் அவருடைய ஊடக குழுமம் குறித்தும் தனியாக ஆராய வேண்டும்.அதில் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இப்பொழுது தமிழ் மக்கள் அவரை நினைவுகூர வேண்டிய இடம் எதுவென்றால் எரிக்கப்பட்ட பின்னரும் இடிக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைக்குப் பின்னரும் நிமிரலாம் என்ற நம்பிக்கையின் தமிழ்க் குறியீடுகளில் அவரும் ஒருவர் என்பதுதான்.