இலங்கையில் 1989ல் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மீது புதிய குற்றச்சாட்டு…!

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் மீது முன்னொருபோதும் நிகழ்ந்திராத கோபநிலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், 1989 இல் நடந்த பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த சந்தேகநபர்களைக் கொண்ட இரகசியப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் இருந்ததாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

1989இல், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தளை மாவட்டத்தின் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தபோது, இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட பாதுகாப்புப் படையினரால் 700 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது.

இக்காலப் பகுதியில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி இடம்பெற்றது. இக்கிளர்ச்சியானது மிகக் கொடூரமான முறையில் பாதுகாப்புப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்டளைப் பங்களிப்பை வழங்கியவர் என்கின்ற குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ச பிரபலமாகப் பேசப்பட்டதுடன் ஒப்பிடும் போது, 1989ல் சிங்கள மக்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் இவரது பங்களிப்பும் காணப்பட்டது என்கின்ற விடயம் மிகக் குறைந்தளவிலேயே அறியப்பட்டுள்ளது என இலங்கையில் செயற்படும் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பாஸனா அபெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகள், கோட்டாபய ராஜபக்ச சட்ட விரோதமாக தடுத்து வைத்தல், பலவந்தமாக காணாமல்போதல், சித்திரவதைகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இவ்வாறான குற்றவியல் சம்பவங்களை வெளியில் கொண்டு வருவதற்கான எவ்வித முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

கோட்டாபய ராஜபக்ச மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த ஒரு மாவட்டத்தில் எட்டு மாதங்களில் மட்டும் அவரது கட்டளையின் கீழ் இடம்பெற்ற பல்வேறு கொடூரங்களின் தீவிரத்தை நாம் கருத்திற் கொள்ளும் போதும், இச்சம்பவம் இடம்பெற்று 30 ஆண்டுகளின் பின்னர் இவர் இலங்கை முழுமையையும் தலைமை வகிக்கின்ற அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டமையானது சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் தமது வரலாற்று அறிவைக் கொண்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1989 இல் மாத்தளை மாவட்டத்தில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கீழ் கடமையாற்றிய சவேந்திர சில்வா தற்போது இலங்கையின் இராணுவத் தளபதியாக பதவி வகிப்பது உட்பட மேலும் பலர் இராணுவத்தின் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளமையானது இலங்கையில் எவ்வளவு தூரம் கொடூரமான குற்றவியல்கள் வேரூன்றியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஆகியவற்றால் 1989ல் இடம்பெற்ற குற்றவியல் சம்பவங்களில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பங்களிப்பு தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில், 1988-90 வரையான காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்ட 1042 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுள் பெரும்பாலானவர்கள் கோட்டாபய ராஜபக்சவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெயர்கள் முதன் முதலாக இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட போதிலும், இக்குற்றவியல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் இரகசியம் பேணப்பட்டது.

மே 1989 தொடக்கம் ஜனவரி 1990 வரையான காலப்பகுதியில், தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மாத்தளை மாவட்டத்தில் பணியாற்றிய போது அவருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்பது தொடர்பாக ITJP – JDS ஆகியவற்றால் தற்போது வெளியிடப்பட்ட புதிய கூட்டறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மாத்தளை மாவட்டத்தில் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய போது இவரால் இம்மாவட்டத்தின் இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை மற்றும் உள்ளக நிர்வாகம் ஆகியன முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் 1989ல் பலவந்தமாக காணாமலாக்கப்படுவதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை விடுவிப்பதில் உதவி செய்யுமாறு கோரி கோட்டாபய ராஜபக்சவை நேரடியாக அணுகியிருந்த போதிலும் இவர்களது இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

1989 சம்பவத்தில் தனது இரண்டு இளம் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்த தாயொருவரிடம், கோட்டாபய ராஜபக்ச அவரது இரு பிள்ளைகளையும் ஒரு சில நாட்களில் விடுவிப்பதாக வாக்குறுதி அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கூறப்பட்ட போதிலும் எவ்வித தடயமும் இல்லாமால் இவ்விரு இளைஞர்களும் துரதிஸ்டவசமாக காணாமலாக்கப்பட்டனர்.

மாத்தளை இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட்ட போது அங்கே இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் இலங்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 16 பேரில் கோட்டாபய ராஜபக்சவும் அவரது கட்டளை வகைகூறலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இலங்கையில் 1989ல் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் வகிபாகம்

 

குறிப்பாக இச்சந்தேக நபர்கள், 1989 செப்டெம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு மாத்தளை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைந்திருந்த இலங்கை இராணுவ முகாமில் 40 நாட்களாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் வழக்குடன் தொடர்புபட்டுள்ளனர்.

இலங்கையில் பொதுவாக அறியப்படும் ‘இரண்டாவது ஜே.வி.பி கலகம்’ மற்றும் ‘கிளர்ச்சி’ என்பது, ஜெனீவா உடன்படிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது போன்று ‘அரசாங்கத் தரப்பினருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான ஆயுத வன்முறை’ போன்று அனைத்துலக சட்டத்தின் கீழ் உள்ளக ஆயுத மோதல் என வறையறுக்கப்பட வேண்டும் என புதிய அறிக்கையில் வாதிடப்படுகிறது.

இரண்டாம் ஜே.வி.பி கிளர்ச்சியானது உள்ளக ஆயுத மோதல் என வரையறுக்கப்பட்டிருந்தால் இதற்கு எதிராக அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை பிரயோகித்திருக்க முடியும்.

இதன்மூலம் அனைத்துலகச் சட்டத்தின் கீழ் இக்குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு இக்குற்றங்கள் அனைத்துலக மயமாக்கப்பட்டிருந்தால், குறைந்தது பாதிக்கப்பட்ட பொது மக்களின் பாதுகாப்பும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதற்கு மேலதிகமாக, இம் மீறல்கள் போர்க் குற்றங்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கும் என்பதுடன் இதில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் இதிலிருந்து மீள்வதற்கான பரிகாரங்களும் கிடைத்திருக்கும்.

 

இக்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் காப்பீடுகள் போன்ற வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளைத் தவிர்த்து இந்த மீறல்கள் அனைத்துலக அதிகார வரம்புக் கோட்பாட்டின் கீழ் அணுகப்பட்டிருக்க முடியும். இதில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக அவர்களது கட்டளை வழங்கல் வகிபாகங்கள் வழக்குத் தொடந்திருக்க முடியும்.

இன்று, ஆயுத மோதலை ‘கிளர்ச்சி அல்லது கலகம்’ என அழைப்பது விவாதிக்கத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இன்று அனைத்துலகச் சட்டமானது கலகத்தில் அல்லது கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இடையில் அனைத்துலகச் சட்டமானது எவ்வித வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், மோதலின் போது அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் ஆகிய இரண்டையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

‘இது இலங்கைகான நீதிச் செயன்முறையை அனைத்துலகமயமாக்குவதில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

 

‘இதன் மூலம் அனைத்துலக நீதியை நாடிநிற்கும் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்கள் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிங்கள மக்களும் கருத்திற் கொள்ளப்படுகின்றனர்.

பாதுகாப்பு படையினரின் செயற்பாடானது பல பத்தாண்டுகளாக கவலையளிக்கும் வகையில் ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளது என்பதுடன் பல்வேறு மீறல்களுடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவ்வித தண்டனைகளுக்கும் உட்படுத்தப்படாததால் தொடர்ந்தும் உயர் பதவிகளில் அமர்கின்றனர்.

தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் தேவை என பல்வேறு குரல்கள் எழுப்பப்படும் நிலையில், இலங்கையில் அங்கம் வகிக்கும் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் நாட்டின் வன்முறை வரலாற்றுக்கு உடந்தையாக உள்ளனர் என்பதை நினைவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும்’ என ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews