இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு நீதியை பெற்றுக்கொடு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியானது நேற்று மாலை மட்டக்களப்பினை வந்தடைந்த அதேநேரம் இன்று காலை திருகோணமலை நோக்கி நடைபேரணி ஆரம்பமானது.
கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் உப்பற்ற கஞ்சி வழங்கப்பட்டு கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரணியானது திருகோணமலை நோக்கி பயணமானது.
வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பேரணியானது மட்டக்களப்பு நகரை வந்தடைந்து நகர் ஊடாக திருகோணமலை வீதியைச் சென்றடைந்து திருகோணமலை நோக்கி பேரணி சென்றது.
இப்பேரணி நாளை திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு சென்று பின் நாளை மறுதினம் முள்ளிவாய்க்காலை அடைந்து அங்கு இனஅழிப்பு வார நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.