போர்களினால் ஒரு நாட்டையோ அல்லது ஒரு இனத்தையோ தோற்கடிக்க முடியாது. போர்களினால் கிடைப்பது வெற்றியும் அல்ல. என கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,
30 வருட இனப்படுகொலை போரில் வடக்கும், தெற்கும் இழந்தவைகள் ஏராளம். இந்த நாளை அமைதிக்கான நாளாக மாற்றியமைப்போம் எனவும் கூறியிருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒரு இனம் பேரவலம் சுமந்து 13 வருடங்கள் நிறைவுற்ற நேற்றய நாள் 18/05/2022 படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலிகள் இடம்பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஒரு நாட்டையோ அல்லது மனித இனத்தையோ ஒருபோதும் போரினால் தோற்கடிக்க முடியாது, அப்படி கிடைப்பது வெற்றியுமல்ல. முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தது ஏராளம்.
வடக்கிலும் தெற்கிலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துவிட்டனர். சிங்களவன், தமிழ், முஸ்லிம்கள் என்று பிரித்துள்ளோம்.
அந்த யுத்தத்தினால் என் ஒரு கண்ணை இழந்துவிட்டேன். இன்னும் பல இழப்புகளை தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.போரின் முடிவை கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்பை விட அன்பை காட்டுவோம்.
பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம். பிரிவதை விட சேர்ந்து வசதியாக இருப்போம்.நம் இதயத்தில் இருக்கும் பிசாசுக்கு பதிலாக கடவுளை எழுப்புவோம்.
இன்றைய நாளை உறுதி மற்றும் அமைதியின் நாளாக மாற்றுவோம். இந்த உலகத்திற்கு கொஞ்சம் அன்பு காட்டுவோம்.சகோதரத்துவத்தில் எழுந்து நிற்போம். இருண்டு கிடந்த நம் தேசத்தை
சகவாழ்வுடன் விளக்கேற்றி ஒளியேற்றுவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.