மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்கவும்….! பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை.

நாடளாவிய ரீதியில் இன்று  ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பரீட்சார்த்திகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிப்பதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

எனினும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின், அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாதிப்பின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் தினங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews