கைபேசியில் பெண் குரலில் பேசி ஏமாற்றி ஆண்களிடம் பணம் பறித்த ஒருவர் யாழ் நகர பகுதியில் கைது!

கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ

புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபா பறித்துள்ளார். அதன்பின்னரும் மிரட்டி ஒரு லட்சம் ரூபா கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews