21வது திருத்தத்தை தடுக்க பசில் கடும் முயற்சி.

முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்கு ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வரைவு முன்மொழிவு வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, ​​அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என அரசாங்கம் நம்புகிறது.

21ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (எஸ்ஜேபி) ஆதரவைப் பெற அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியதோடு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரைவு இறுதி ஆவணம் அல்ல என்றும், திருத்தங்களுக்கு திறந்திருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அதன் தற்போதைய வடிவத்தில் முன்மொழிவுகள் குறித்து ஏற்கனவே பல கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உத்தேச 21வது திருத்தச் சட்டமானது ஏனையோரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews