தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை பேசப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எவ்வாறு பெறலாம் என சம்பந்தர் கணக்கு போடுவார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் 25.05.2022 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரண கர்த்தாவாகும்.
ஏனெனில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தப் பிரதேசத்தில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவித்தேன்.
அது மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய மக்களை காப்பாற்ற வருமாறு அழைப்பு விடுத்தேன் யாரும் வரவில்லை.
தற்போது கனடா பாராளுமன்றத்தில் இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைதான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நானும் ஒரு இலங்கை என்ற வகையில் குறித்த தீர்மானத்தை எதிர்க்கிறேன் ஏனெனில் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் மக்களை காக்காமல் விட்டது தமிழ் தலைவர்கள் விட்ட பிழை.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆறு தடவைகள் பிரதமராக இருந்து அவரிடம் சாதிக்க முடியாதவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது தமிழர் பிரச்சினை தொடர்பில் பேசப்போகிறேன் என கூறுகிறார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தாது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அரச சுகபோகங்களையும் அனுபவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றப் போகிறார்கள்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் அல்லது ஏனைய பொறுப்பான பதவிகளை வகிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விருப்பம் இருக்கிறது.
ஆனால் யாருக்கு வழங்குவது என அவர்களுக்குள்ளே முரண்பாடு இருப்பதால் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் ஏதோ ஒரு வகையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்
மேலும் மகாத்மா காந்தி அன்றே சொல்லிவிட்டார் இந்தியா இருக்கும் வரைக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என.
அவரது கருத்தை இப்போது நான் நினைவுபடுத்துகிறேன் இந்தியத் தமிழ்நாடு மட்டும் போதும் இலங்கை மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கு .
இந்தியா தற்போது இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அனுப்பி வைத்துள்ளது சிலர் அதனை தாம் கேட்டு பெற்றுக் கொண்டதாக அரசியல் செய்து வருகின்றனர்.
எமது அரசியல்வாதிகள் உதவி வழங்குங்கள் எனக்க உதவி வழங்கும் இந்தியாவை தடுக்காமல் இருப்பது மேலான விடயம்.
ஆகவே இந்தியாவுக்குத் தெரியும் தமிழ் மக்களுக்கு அப்போது என்ன செய்ய வேண்டும் என அவர்களே தாங்களாக உதவி செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்