21ஐ காரணம் காட்டி மாகாணசபைகள், தேர்தல் முறைகளை மாற்றுவதற்கு முயற்சி: மனோ எம்.பி சாடல்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் மாகாணசபைகளையும் தேர்தல் முறையையும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகனும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.

இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும்.

21ஆவது திருத்தம் என்று கூறி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ஆவது திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் கூறுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன. இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு. ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டுவரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி  திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம்  வட-கிழக்கில் காணி பிடிப்பு, பௌத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ஆவது திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம். பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் உரக்க கூறினேன்.

இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகள், அந்தக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பீக்கள், தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews