ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு.

பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகை கிடைக்காத நிலையில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைமையும், அறுவை சிகிச்சைகள் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு அவசியமில்லாத மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் தையல் நூல் மற்றும் எலும்பு முறிந்தால் பயன்படுத்தப்படும் பிளேட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வகப் பரிசோதனைகள் 50 வீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஏராளமான இதய நோயாளிகள், சுவாச நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், நாய் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்படும் நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும் வெறிநாய் நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றதா என அவதானமாக இருக்குமாறு ஆலோசனை மாத்திரமே வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டுள்ளதாக அவசர முகாமைத்துவ பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யார் என்ன சொன்னாலும், நாட்டின் சுகாதாரம் சீர்குலைந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டதென அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews