பொதுமக்களை அச்சுறுத்தும் பொலிஸாரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- அசேல சம்பத்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸாருக்கு எதிராக தாம் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆட்சியை அமைப்பதற்காக 69 இலட்சம் மக்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காது பொலிஸாரே பதிலளிக்கின்றனர்.

நீதி, ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே பொலிஸார் உள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்று எரிபொருளை விநியோகிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதும் பொதுமக்களை பாதுகாப்பதுமே பொலிஸாரின் கடமையாகும்.

எனினும் உண்பதற்கு உணவு இல்லாமல் பாரிய சவால்களை எதிர்கொண்ட நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரும் மக்களை, பொலிஸார் தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.

நேற்றைய தினம் எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிமுனையால் அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

அந்த பொலிஸார் அதிகாரியின் குடும்பத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையிலேயே நிற்பர். இந்த விடயம் அந்த பொலிஸ் அதிகாரிக்கு தெரியாதா?

எனவே பொலிஸ்மா அதிபருக்கு பின்னால் நின்று பொலிஸ் அதிகாரிகளை வழிநடத்துபவர்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

இதற்கு அரசாங்கமே பதிலளிக்க வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews