இன்று யாழில் இடம்.பெறவுள்ள மக்கள் போராட்டத்திற்கு யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு….!

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக இன்று (19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் அருகில் போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.

நாடு தற்போது பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்து இருக்கும் நிலையில் இலங்கையில் உள்ள ஒரு பொறுப்பான அமைச்சர் சர்வதேசத்துக்கு பொய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வலிந்து காணாமல்போனோர் விடயம், காணி அரசியல் கைதிகள் விடயம், விடுவிப்பு போன்றவற்றில் அப்பட்டமாக உண்மையை மூடிமறைக்கும் வகையில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பொய் கூறியுள்ளார். இதனைக் கண்டித்து தமிழ் மக்களின் உரிமைக்காக சகலரும் எவ்வித அரசியல் கட்சி பேதமின்றி  இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவில் அருகில் ஒன்று கூடுங்கள் என்றார்.

இந்த போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் ஆதரவளிக்கவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews