வீடொன்று முற்றுகை, போலீஸ் ஒருவர் காயம், 12 பேர் கைது….!

கள்ளு வியாபாரம் இடம்பெற்றுவந்த வீடொன்றை முற்றுகையிட முயற்சித்தபோது இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துமடு பாவக்கொடிசேனை பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கசிப்பு விற்பனை செய்துவரும் வீடு ஒன்றை முற்றுகையிட்டு கசிப்பு வியாபாரியை கசிப்புடன் கைது செய்ய முற்பட்டபோது, அங்கிருந்த குழு ஒன்று பொலிஸார் மீது தாக்குதல்  மேற்கொண்டது.

குறித்த தாக்குதலில் பொலிஸ் ஒருவர் காயமடைந்ததுடன் வாகனத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக 6 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று காலை 11.00 மணியளவில்

குறித்த பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை  முற்றுகையிட்டு அங்கு கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை 2 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இளைஞனை ஜீப்வண்டியில் ஏற்றுவதற்கு பொலிஸார் முற்பட்டபோது குறித்த இளைஞனின் சகோதரி உட்பட்ட உறவினர்கள் கொண்ட குழுவினர் அவரை ஜீப் வண்டியில் ஏற்றவிடாது பொலிஸாரை தடுத்தனர்.

இதன் போது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே இழுபறி இடம்பெற்றுக் கொண்டிருந்த போது குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவனை பொலிஸார் சுற்றிவளைத்து மீண்டும் பிடித்தனர்.

இதனையடுத்து குறித்த இளைஞனை ஜீப் வண்டியில் ஏற்றிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதில் பொலிஸார் ஒருவர் காயமடைந்ததுடன் ஜீப் வண்டியின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதனையடுத்து காயமடைந்த பொலிஸாரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன் பின்னர் பொலிஸார் கடமையை செய்யவிடாது தடுத்த மற்றும் பொலிஸாரின் ஜீப் வண்டியை உடைத்து சேதப்படுத்திய 6 பெண்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews