அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜாவின் முன்மொழிவுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதி மக்களின் நன்மை கருதி இந்த பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் ஏற்பட்ட நிர்வாக ரீதியாக குழப்பங்கள் காரணமாக நிர்மாணப்பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் புதிதாக கடமையேற்ற ஆணையாளரினால் குறித்த சந்தை விரைவாக புனரமைக்கப்பட்டுள்ளது.
மீன்சந்தை,மரக்கறிச்சந்தை,கோழி,ஆடு,மாடு விற்பனை நிலையங்கள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாகவும் மக்கள் இலகுவாக வந்துசெல்லும் வகையிலும் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,முன்னாள் மாநகரசபையின் ஆணையாளரும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளருமான க.சித்திரவேல் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பொதுச்சந்தை திறந்துவைக்கப்பட்டதுடன் பொதுச்சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.