பாக்கிஸ்தான் அரசு வழங்கும் உயர் கல்விக்கான புலமைப் பரிசில் பரீட்சைகள்.

பாக்கிஸ்தான் அரசு இவ்வாண்டிலும் இலங்கையர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்கும் திட்டத்தின் கீழ் முதலாவது பரீட்சைகள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த சுமார் 300 இற்கு மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றினர்.

கிழக்கு மாகாண மாணவர்கள் தற்போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எதிர்கொள்ளும் போக்குவரத்து சீர்கேடு நிலைமையில்; இந்தப் பரீட்சையை சிரமமின்றி எழுதும் வகையில் பரீட்சையை கிழக்கு மாகாணத்தில் நடத்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரியான கல்சூம் கைஸர், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்ட முகாமையாளர் ஜெஹான்ஷெப் கான், பணிப்பாளர் எம். அஸ்ஹர் அலிகான், திட்ட இணைப்பாளர் ஆதியா றஸுல், திட்ட முகாமையாளர் நவீத் இஹ்ஸான் ஆகியோர் பரீட்சைகளை நெறிப்படுத்தி மேற்பார்வை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1000 இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசு புலமைப்பரிசில்களை வழங்கும் அதேவேளை, உயர் கல்வி நடவடிக்கைகளில் பெண்களை ஊக்குவிக்கின்றோம்’ எனவும் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்ட முகாமையாளர் ஜெஹான்ஷெப் கான் தெரிவித்தார்.

இதேவேளை, மருத்துவத்துறை பொறியியல்துறை சமூக விஞ்ஞானம் சட்டத்துறை நுண்கலை இதேபோன்று விண்ணப்பதாரிகள் விரும்பும் வேறு துறைகளுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் இலங்கை மாணவர்கள் உயர் தரவரிசையில் உள்ள பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews