யாழ்.கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தின் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய், தந்தையர்கள் இறந்தால் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டுமென முதியோர் இல்ல உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக சென்ற நிலையில் தமக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என எதிர்ப்பு தெரிவிக்கும்போது அவர்களை இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கைதடி அரசு முதியோர் இல்லத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட முதியவர்களை நாம் பராமரிக்கிறோம். சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த நிலையில் நாமும் எரிபொருள் பெறுவதற்காக சென்றோம்.
எமக்கு வழங்க முடியாது என சொன்னார்கள். நாம் மத்திய அரசின் சுகாதார உத்தியோகத்தர்களாக அங்கீகரிக்கப்படாத நிலையில் எமக்கு வழங்க மாட்டோம் என தெரிவிப்போர் நாமும் சுகாதார உத்தியோகத்தர்களின் சேவைகளையே ஆற்றுகிறோம் என்பதை அறியாமல் உள்ளனரா?
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களை குளிப்பாட்டுவது உணவு பரிமாறுவது மருந்து கொடுப்பது போன்ற சேவைகளை நாமே ஆற்றுகிறோம். முதியவர்களுக்கு மதிய உணவு வழங்காமல் வடமாகாண பிரதம செயலாளரினால் கையெழுத்திடப்பட்ட கடிதப் பிரதியுடன் வரிசையில் நிற்கிறோம் அப்போதும் எரிபொருள் வழங்க முடியாது என்கிறார்கள்.
ஆகவே எரிபொருள் நமக்கு தராவிட்டால் நாம் முதியோர் இல்லத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் நிலையில் அங்கு தங்கியுள்ள முதியவர்கள் உரிய நேரங்களில் உணவும், மருந்து வழங்காது இறப்பார்களேயானால் யாழ்.மாவட்டத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே காரணம் என அவர்கள் கூறினர்.