இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வார இறுதியில் ரஷ்யா செல்லவிருந்த போதிலும் குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் உரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை குழுவொன்று ரஷ்யா செல்ல தயாரானது.
ரஷ்யா செல்லவிருந்த குழுவில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் உள்ளடங்குவதாக கூறப்பட்டது.
முன்னதாக அறிவித்தபடி இந்த வாரம் விஜயம் நடைபெறாது என்று கூறப்படுகிறது. எனினும் இலங்கை குழுவினரின் வரவேற்பை ரஷ்யா ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாட இரண்டு அமைச்சர்கள் விரைவில் செல்லவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.