கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சட்டத்துக்குப் புறம்பாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் லீற்றர் டீசல், 210 லீற்றர் பெற்றோல் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பி.ஆர்.ஐ.ஜமில் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,
எரிபொருளை அதிகளவில் வைத்திருந்தமை தொடர்பில் சமர்ப்பணத்தை முன்வைத்தார். பொலிஸாரும் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் சமர்ப்பணத்தை முன்வைத்தனர். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் பி.ஆர்.ஐ.ஜமில் கட்டளையை வழங்கினார்.
பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த அவதிப்படுகின்றனர். ஆனால் எரிபொருளைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு பெருமளவு எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களின் பின்னணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்,
பணியாளர்கள் மற்றும் முகவர்கள் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுத்து கைது செய்ய கிளிநொச்சி மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு மன்று கட்டளையிடுகின்றது. இந்த வழக்கின் சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படுகிறது.
சந்தேக நபரிடம் மீட்கப்பட்ட எரிபொருளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிடப்படுகிறது என்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பி.ஆர்.ஐ.ஜமில் கட்டளை வழங்கினார்.