நாட்டின் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மட்டக்களப்பில் குறுந்தூர பேருந்து சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள்ளேயே இன்று(15) தற்காலிகமாக இந்த குறுந்தூர பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றம் காரணமாக முச்சக்கரவண்டி உள்ளிட்ட பிரயாண சேவைகள் மிக குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் அவற்றிற்கான வாடகை கட்டணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதோடு உள்ளக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.
நோயாளர்கள், மாணவர்கள், அரச தனியார் அலுவலகங்களின் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பலரும் தமது போக்குவரத்து செலவினை கருத்திற்கொண்டு பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
திரு.சுஜித் லியோன் லோறன்ஸ் எனும் தனிநபரின் ஊடாக இந்த குறுந்தூர பேருந்து சேவையானது மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்தும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சேவைக்கான ஒருவழி கட்டணமாக பொதுமகன் ஒருவருக்கு 50 ரூபாயும், பாடசாலை மாணவர்களுக்கு ரூபா 40 ரூபாயும் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவீன தகவல் தொழில்நுட்பத்தின் துணையுடன் பொது மக்கள் தமது கையடக்க தொலைபேசியின் ஊடாக கண்காணித்து கொள்ளும் வசதிகளும் இதில் நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பார் வீதியில் ஆரம்பமாகும் இந்த சேவையானது பிரதான வீதியூடாக சென்று வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை ஊடாக செல்வதுடன் கோவிந்தன் வீதியுடாக பிரதான பேருந்து நிலையம் வந்து திருமலை வீதியூடாக சென்று புகையிரத குறுக்கு வீதியூடாக எல்லை வீதியை அடையும். பின்னர் அதன் ஊடாக சென்று மீண்டும் பார் வீதி கீரிமடு சித்திவிநாயகர் ஆலயம் வரையில் சேவை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில் அருட் தந்தை தேவதாசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.