சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக உருவாக்குமாறு தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு

பொது மக்களின் குரலுக்கு மதிப்பளித்து செவிசாய்க்குமாறும், தேசத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் அவசரமாக ‘ஐக்கிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை’ உருவாக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவிவரும் நிகழ்வுகளால், கவலையடைந்துள்ளதாகவும், பொருளாதார திவால் நிலைக்கு அப்பாற்பட்டு, ஆழமான அரசியல் பேரழிவை நோக்கி நாட்டை, சிலர் நகர்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நிலவும் ஊழல் மிக்க ஆட்சி முறையைக் கண்டித்தும், சீர்திருத்தங்களுக்காகவும், இளைஞர்கள், அமைதியான, அரசியல் சார்பற்ற போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் சபை அழைப்பு விடுத்துள்ளது.

சொத்துக்களை சேதப்படுத்தும் எந்தவொரு செயல்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களோ அல்லது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களோ, தங்கள் அதிகாரத்தை எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்து, பொதுமக்களின் பொறுமையைத் தூண்டி வன்முறைக்கான சூழலை உருவாக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பதும் முக்கியமானது.

அத்துடன் நடந்து வரும் போராட்டங்களைக் கையாள்வதில் குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்துவதற்கும், மக்களின் விரக்தியைக் கையாள்வதிலும்,ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸார் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் கிறிஸ்தவ சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews