இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை காலை பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிரதமர் பதவியை வகிக்க நால்வரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒருவரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தினேஷ் குணவர்தன, விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் பெயர்கள் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலையிலான அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். தொடர்ந்து ஜூன் மாதம் நிதி அமைச்சர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச விலகினார். தொடர்ந்தும் மக்கள் போராட்டம் நீடித்திருந்த நிலையில், கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகினார்.
இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று காலை இடம்பெற்றிருந்தது.
இதில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளை பெற்றிருந்தார். ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து போட்டியிட் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அநுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் வகித்த பிரதமர் பதவி வெற்றிடமாகியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.