வன்முறையை கட்டவிழ்த்துவிட்டே புதிய ஜனாதிபதி தனது கடமையை ஆரம்பித்துள்ளார் – நளின் பண்டார.

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மிகவும் மோசமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டே புதிய ஜனாதிபதி தனது கடமையை ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உண்மையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் அவ்விடத்திலிருந்து வெளியேறுவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே அவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட இடத்தில் இராணுவத்தின் குவிக்கப்பட்டு இருந்தனர். சிலர் இராணுவத்தினரா என்பது கூட தெரியாதளவில் முகத்தை மூடியிருந்தனர்.

மிகவும் மோசமாக இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேரர்கள், பாதிரியார்களை கடுமையாக சாடியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு நாம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

காலிமுகத்திடலிலிருந்து வெளியேறுங்கள் என்று புதிய ஜனாதிபதி முன்கூட்டிய அறிவிப்பை விடுத்திருந்தால் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தலாம்.

அவ்வாறு எந்த வேண்டுகோளையும் விடுக்காது அறிவித்தல்களை விடுக்காது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதினூடாக இந்த அரசாங்கத்தில், நாட்டு மக்கள், இளைஞர்களுக்கு போராடும் உரிமை இல்லை என்பதையே புதிய ஜனாதிபதி கூற வருகின்றார்.

ஒடுக்குமுறைகளை அமுல்படுத்தியே இந்த அரசாங்கம் பயணிக்கவுள்ளது என்ற செய்தியை கூறும்வகையிலேயே இந்த அரசாங்கம் இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews