பொலிசாரின் பாதுகாப்பின்றி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் அமைதியாக எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரனுடன் நேற்று பொலிசார் முரண்பட்டிருந்தனர். பொதுமக்களிற்கு எரிபொருள் வழங்கும் அதே நேரம் பொலிசாருக்கும் வழங்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கு பிரதேச செயலாளர் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரதேச செயலாளருடன் முரண்பட்டதுடன், எச்சரித்தும் உள்ளார். அதேவேளை, இனி பாதுகாப்பு கடமைக்கு வரமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. நேற்றைய இலக்கத்திற்கு தொடர் இலக்கம் வழங்கப்பட்டு இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆயினும், பாதுகாப்பு கடமைக்கு பொலிசார் வருகை தரவில்லை. இந்த நிலையில், பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில், கிராம சேவையாள்கள் மற்றும், உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் அமைதியான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.