போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை!

காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

விடுத்துள்ளது.
கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல,
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை பலரும் வன்மையாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தாக்குதல் தொடர்பில் பல்வேறு சர்வதேச சமூகம் சார்ந்த அமைப்புகளும் மற்றும் சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவ் விடயம் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரம அடையச் செய்யும்.
அதற்கமைவாக, குறித்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனிவிடம் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கோரிக்கை விடுப்பதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews